வியாழன், 25 டிசம்பர், 2014

                                      என்  அப்பா 

                                     

தட்டுத்  தடுமாறி  எட்டு அடிஎடுத்து 
ஏங்கித்  தவிக்கயிலே
என்னே ! என்னருகே  ஓடிவந்து நீ 
சின்னக்கை தொட்டு 
எடுத்து அடிவைக்க
சொல்லிக்கொடுத்தாயே!
அப்பா எனச்சொல்லி  என் நாவில்  நான் படிக்க 
எத்தனித்து  நிற்கையிலே 
நாவால் நான் படிக்க 
நற்பாடம் சொன்னாயே!
அறுசுவையும் நான்சுவைக்க  
அள்ளிக்கொடுத்தவனே !
பட்டினியாய் நீ இருந்த காலமதை 
நான் கண்டதில்லையப்பா !
பட்டினியாய்  நானிருக்க 
நீ விட்டதில்லையப்பா!
ஊருக்கு உத்தமனாய் 
நீ இருந்த  காலமதை 
ஊர்  சொல்லி  நான் கேட்க 
என் உள்ளம்  விம்முதையா !
வாழ்க்கைப்  பாடத்தை 
நீ சொல்லி நான் கேட்ட 
கால நினைவெல்லாம் 
கண்முன்னே  நிற்குதையா !
கண்ட இடமெல்லாம் 
எனைப்பற்றி  நீ கூற 
கண்டவர்கள் கூறியதை 
காதினிக்க கேட்டதெல்லாம்
உன்  முகத்தை நான்பார்க்க
அத்தனையும்  தெரியுதையா !
ஊர்மெச்ச வாழ்ந்ததில்லை
உத்தமன்  நான்னென்று 
நீ கூறி  திரிந்ததில்லை
ஊருக்கு நீ உழைக்க 
ஒருபோதும்  மறந்ததில்லை !
துயரத்தில் வந்தவரை 
நீ பார்த்து நின்றதில்லை !
குணங்கெட்ட மக்களையும் 
நீ வெறுத்து ஒதுக்கவில்லை !
என் வாழ்க்கை நலமாக்க 
நீ பட்ட துன்பமெல்லாம் 
என்நெஞ்சம் என்றென்றும் 
என் நினைவில்  மறக்கவில்லை !
அத்தனைக்கும் நல்லவரை 
ஊர் போற்றும்உத்தமரை 
இரக்கமில்லா எமனிங்கே
ஏன்னெடுத்துச் சென்றானோ !
எமனே! உனக்கெமன்
இவ்வுலகில் இருந்திலையோ !
நான் துடிக்க வேண்டும்மென்று
காலகனே நினைத்தானோ !
நீ உழைத்த  உழைப்பெல்லாம் 
போதுமென்று நினைத்தானோ !
பெற்றவனே நீ  என்றும் 
என்னருகில் இருப்பாயோ !
நேருதுன்பம் யாவையுமே
தீர்த்து வைத்து  விடுவாயோ !
என் நெஞ்சில்  என்றென்றும் 
நீ இருந்து வாழ்வாயோ !
உன் செயலை என் நெஞ்சம்  
என்றென்றும் மறையாது 
நான் தூங்கும் நேரத்தில் 
உன் நினைவும் கலையாது !
அப்பா ! உன் நினைவில் 
எந்நாளும் வாழ்த்திடுவேன் !
என்னருகில் நீ இருந்து 
என்றென்றும்  காத்திடப்பா

                                                                                                                                                                         .....ஆண்டியப்பன்.....

(என் அப்பாவின் இறப்பு   என் நெஞ்சத்தில்  ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது அந்த சுமையை இங்கு இறக்கிவைகிறேன்  பகிர்ந்து கொள்ளுங்கள் )